North gets two sea food factories - Rs. 40 million investment

இலங்கையில் யுத்தம் நடைபெறுவதற்கும் விடுதலைப்புலிகள் தனிநாடு கேட்டுப்போராட்டத்தை நடத்தவும் அன்றைய இனவாதிகளே காரணம் என்று கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

இன்று யாழில் புதிய ஐஸ் தொழிற்சாலையை திறந்தவைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திற்குப் பின்னர் அன்றிருந்த தமிழ் அரசியல் தலைவர்கள் பெடரல் முறை வேண்டாம் மத்திய அரசாங்கத்தின் கீழ் செயற்பட விரும்பவதாக தெரிவித்திருந்தனர்.

1958 ஆம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டபோதும் ஒரு நாட்டுக்குள் இரண்டு மொழிகள் வேண்டும் என்று கோசமிட்டனர். இந்தக்கோசம் 20 வருடங்களின் பின்னர் விடுதலைப்புலிகள் தோற்றம் பெறுவதற்கும் அவர்கள் தனிநாடு கேட்டு போராடுவதற்கும் வழிவகுத்தது என தெரிவித்தார்.

மேலும், இந்த போராட்டத்தின் விளைவாக 30 வருடகாலத்தில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட சிங்கள தமிழ் இளைஞர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது என்றார். அவ்வாறு கோசங்கள் இட்ட இனவாதிகளில் 75 வீதமானவர்கள் அழிக்கப்பட்டு விட்டார்கள் இன்னும் 25 வீதமானவர்கள் மட்டுமே தென்னிலங்கையில் இருக்கின்றார்கள்.

ஒரு நாணயத்தில் இருக்கின்ற இரண்டு குற்றிகளைப்போன்றது தான் இன்றுள்ள தமிழ், சிங்கள இனவாதம் என்பது இந்த இனவாதப்பொக்கை இனிவரும் காலங்களில் எமது எதிர்காலப் பரம்பரைக்கு நாங்கள் கொண்டு செல்லவிடமாட்டோம்.

வடக்கு மாகாணம் எம்மோடு என்றும் கூடவே இருக்கும் ஒரு மாகாணம் டீ.ஸ் சேனநாயக்க முதல் சந்திரிகா குமாரதுங்க வரை செலவழிக்காத பணத்தைச் செலவழித்து வடக்கில் பாரிய அபிவிருத்திப் பணிகளை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் செய்திருக்கின்றது.

இனி ஒரு பயங்கரவாதம் உருவவதை தடுக்க எம்மால் முடியும் அவ்வாறு உருவாகினால் தடுப்பதற்கு படையினரால் முடியும் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன் 2013 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் பல்வேறு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் அவர் குறிப்பட்டார்.

2013 ஆம் ஆண்டு வடமாகாணத்தில் பாரிய அபிவருத்தி திட்டங்கள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவுள்ளது. இதனூடாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை முதலமைச்சர் ஆக்குவதே எமது நோக்கம் என்று கடற்தொழில் நீரியல்வள அமைச்சர் தெரிவித்துள்ளார்.